மன்னரே தெய்வம் என்ற கொள்கை வலுப்பெற்று, மன்னர் வாக்கே தெய்வ வாக்கு என்றிருந்த காலத்தில் உரோமை நகரில் கிறிஸ்தவம் பரவி, அன்றைய தப்பான எண்ணங்களுக்கு சவால் விட்டது. அவ்வேளையில் பேரரசர் தியோக்கிளேசியன், தான் வெற்றி பெற்ற உரோமானிய கீழ்த்திசை நாடுகளுக்கு மன்னனாக தன் தம்பி மாக்சிமியனை நியமித்திருந்தார்.
கிறிஸ்தவம் பரவிவருவதைக்கண்ட பேரரசர், தன் தம்பி மாக்சீமியனுக்குக் கடிதம் எழுதி கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கக் கேட்டுக்கொண்டார். கொடுங்கோலரான மன்னர் மாக்சிமியன், கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பாதிச் சொத்தும் மீதி மன்னருக்கும் என்று ஆணை பிறப்பித்தார்.
மாக்சிமியனுக்குப் படைத்தளபதியாகவும், அந்தரங்க மெய்க்காப்பாளராகவும், நண்பராகவும் செபஸ்தியார் என்ற ஒருவர் இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது மன்னருக்கோ உயர் அதிகாரிகளுக்கோ தெரியாது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டக் கிறிஸ்தவர்களுக்கு உணவு வழங்கி, ஆறுதல் கூறி, ஆதரித்து வந்தார் செபஸ்தியார். ஆனால் சிறைத் தலைவன் நிக்கோஸ் கிராஸ்துஸ், தளபதியே நான் சிறைக்கதவை பூட்டி என் கடமையைச் செய்யவேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறுவதுண்டு. அவன் மனைவி ஜோயே,பக்கவாதத்தால் தாக்கப்பட்டு ஆறு வருடங்களாக ஊமையாய் இருப்பதை அறிந்து உருக்கமாய் செபித்து அவள் நாவில் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார் செபஸ்தியார். சிறை அதிகாரி நிக்கோஸ் கிராஸ்துஸ் மனம் மாறினார். புது கிறிஸ்தவர்களை தம் வீட்டிலேயே பாதுக்காப்பாக வைப்பதாகக் கூறினார்.
உரோமைப் பேரரசின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீரத்தளபதியாகிய செபஸ்தியார், உரோமானிய இளைஞர்களைப்போல் அன்றி, ஒழுக்கத்திலும் நற்குணங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்த்த பேராசைக்காரன் புல்வியன், இவர் கிறிஸ்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று சந்தேகம் கொண்டான். மன்னரிடம் செபஸ்தியார் குறித்த உண்மை உரைக்கப்பட்டது. இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்த படைத்தளபதி நன்றி கெட்டவரா எனக் கோபம்கொண்ட மன்னர் மாக்சிமியன், ‘செபஸ்தியாரை இன்று இரவே 2 மணிக்குமேல் காட்டுப்பக்கம் கொண்டு சென்று மரத்தில் கட்டிவைத்து, அணு அணுவாக வேதனைப்படுத்தி சல்லடையாக அம்பால் துளைத்து, சித்திரவதைப்படுத்தி, கொல்லுங்கள்’ என்று கோபாவேசமாக கட்டளையிட்டார். காட்டில் பட்டமரத்தில் கட்டிவைத்து மன்னனின் கட்டளைப்படி அம்பால் எய்த வில்வீரர்கள், அவர் இறந்துவிட்டார் என நினைத்து சென்றுவிட்டனர்.
அங்குவந்த சில கிறிஸ்தவ வீரர்களால் காப்பாற்றப்பட்ட செபஸ்தியார், மற்றவர் தடுத்தும் கேளாமல் மன்னரைக் காணச்சென்றார். குற்றமற்றவர்களையும் கொன்று குவிக்கிறாயே, என அவர்கள் சார்பில் நீதி கேட்டார். கோபம் கொண்ட மன்னர் அவர் உயிருடன் இருப்பதைக்கண்டு, அவரை இழுத்து வந்து, தன் முன்னிலையில் தடியால் அடித்துக் கொல்லுமாறு ஆணையிட்டார். ஆணை உடனே நிறைவேற்றப்பட்ட நாள் கி.பி 288ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி. செபஸ்தியாரின் திரு உடல் சுரங்கக் கல்லறையில் புனித பேதுரு, பவுல் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
மறைசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பதை மெய்யாக்கிய இந்தப் படைத்தளபதிதான் புனித செபஸ்தியார். ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, அத்லெட் வீரர்களுக்கு, மற்றும் விளையாட்டு துறைக்கான பாதுகாவலர். இவரது காலம் கி.பி.268-ம் ஆண்டு. இவரது நினைவுத் திருவிழா சனவரி மாதம் 20-ம் தேதி. இயேசுவுக்காக அம்புகளால் குத்தபட்டு மரணத்தை தழுவினார்.
நன்றி : அருட்தந்தை மைக்கேல் ராஜ் செல்வம்
உரோமையுலுள்ள புனித செபஸ்தியாரின் கல்லறையுடன் கூடிய தேவாலயம்.
No comments:
Post a Comment